புதுடெல்லி: விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் சிறிய கல் தென்பட்டதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியது. அண்மையில் டெல்லியில் இருந்து நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுக்குச் சென்ற பெண்மணிக்கு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது உணவு வழங்கப்பட்டது.
அதைச் சாப்பிடத் தொடங்கிய அந்தப் பெண் பயணி, உணவுக்குள் சிறு கல் ஒன்று தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியானார். உடனடியாக அதைத் தனது கைப்பேசியில் அவர் படம் பிடித்தார். பின்னர் கடந்த 8ஆம் தேதியன்று இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார். மேலும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் பெண் பயணிக்கு நேர்ந்த அனுபவத்துக்காக வருந்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாகக் கூறப்படுவதை மிக தீவிரமான நிகழ்வாகக் கருதுகிறோம். இதற்காக மன்னிப்பு கோருகிறோம்" என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

