புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான தொடர் புகார்களை அடுத்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதையடுத்து, உணவுக் கழக துணை பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மூன்று மாநிலங்களில் அந்தக் கழகத்துடன் தொடர்புள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து பொது விநியோகத் திட்டத்துக்கான உணவு தானியங்களைக் கொள்முதல் செய்கிறது உணவுக்கழகம்.
இந்நிலையில், உணவுக் கழகத்தில் பல்வேறு வகையில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
உணவு தானிய கொள்முதல் தொடங்கி அவற்றைச் சேகரித்து வைப்பது தொடர்பிலும் விநியோகம் தொடர்பாகவும் கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறுவதாகப் புகார்கள் கிளம்பின.
இந்தக் கழகத்தின் உயர் அதிகாரிகள், தானிய வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் ரகசியமாகக் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.
உணவுக் கழக அதிகாரிகள் பலருக்கு லஞ்சப் பணம் கைமாறியதாக கூறப்படுவது குறித்து சிபிஐ தரப்பில் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புகார்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, கடந்த ஆறு மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் சிலர் உணவுக் கழக அதிகாரிகளை உளவு பார்த்து வந்தனர்.
இந்நிலையில் உணவுக் கழக துணைப் பொது மேலாளர் ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை மேற்கொண்டனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், உணவுக் கழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர்கள், செயல் இயக்குநர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

