புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு நாடு முழுவதும் உள்ள 21 முக்கியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்.
பல்வேறு மாநிலங்களில் நீடித்த இந்த நடைப்பயணத்தின்போது சுமார் 3,300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ள நிலையில், எதிர்வரும் 30ஆம் தேதி காஷ்மீரில் இந்த நடைப்பயணத்தை முடிக்க உள்ளார் ராகுல்.
இதையடுத்து, ஸ்ரீநகரில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்டுள்ள 21 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது சிக்கலான தருணத்தில் முக்கியப் பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனம் திசை திருப்பப்படுவதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது என்றும் இறுதி நிகழ்வில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்பது அப்பயணத்தின் நோக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் நடைப்பயணத்தில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுடனான நேரடி உரையாடல்தான் இந்தப் பயணத்தின் மிகப்பெரிய சாதனை என்று கூறியுள்ளார்.

