புதுடெல்லி: அரசியல் விளம்பரங்களுக்காக அரசுப் பணத்தை செலவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, விளம்பரத்துக்காக செலவிட்ட ரூ.164 கோடியை திருப்பிச் செலுத்துமாறு டெல்லி தகவல், விளம்பரத்துறை இயக்குநரகம் அக்கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பியுள்ள நோட்டீசில், அடுத்த பத்து நாள்களுக்குள் இத்தொகையை திருப்பிச் செலுத்தத் தவறினால் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அரசு அரசியல் விளம்பரங்களுக்காக, உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளை மீறி, அரசுப் பணத்தைச் செலவிட்டதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, விளம்பரங்களுக்காக செலவிட்ட ரூ.97 கோடியை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்கும்படி டெல்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், ஆம் ஆத்மி கட்சி அத்தொகையைச் செலுத்தவில்லை.
இந்நிலையில், வட்டியும் அசலுமாக ரூ.164 கோடியை அக்கட்சி அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என டெல்லி அரசின் தகவல், விளம்பரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் உத்தரவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

