நாய் குரைத்ததால் தகராறு: பெண் பலி
லக்னோ: இரவு நேரத்தில் நாய் ஒன்று இடைவிடாமல் குரைத்ததால் உத்தரப் பிரதேசத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 50 வயது பெண் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இலவச மின்சாரம்: காங்கிரஸ் உறுதி
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைத்தால் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் மே மாதத்துக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி இம்முறை ஐந்து முக்கியமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கும் என்றும் அவற்றுள் இலவச மின்சாரம் முதல் வாக்குறுதி என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேர்தலையொட்டி பாஜகவும் கர்நாடகா முழுவதும் பேரணி நடத்தி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

