புதுடெல்லி: வடமாநிலங்களில் நிலவும் பனிமூட்டம், கடுங்குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.
போர்வை போர்த்தியது போன்ற அடர்த்தியான பனிமூட்டத்தால் பார்வை தெளிவாகத் தெரியாததால் தலைநகர் டெல்லிக்கு வந்து செல்லும் ரயில்களும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய 60 விமானங்கள் தாமதமாக வந்ததாகவும் 22 அனைத்துலக விமானங்கள் டெல்லியில் இருந்து தாமதமாகப் புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக குறைந்து, நேற்று காலை கடுங்குளிர், பனிமூட்டம் நிலவியது.
இந்தப் பாதிப்பின் காரணமாக மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சுவாச நோய் உள்ளிட்ட பாதிப்புக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீரிழிவு, ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், காலையில் நடைப்பயிற்சி செல்வதைத் தவிர்க்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
குளிர்காலம் காரணமாக பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை 9% ஆக அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பஞ்சாப், பீகார், ஹரியானா, டெல்லி, உ.பி. முழுவதும் அடர்த்தியான பனிமூட்டம் காணப்படுவ தாக இந்திய வானிலை ஆய்வு மையம் டுவிட் செய்துள்ளது.

