பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளை மாணவர்கள் இனி சார், மேடம் எனக் குறிப்பிடத் தேவை இல்லை என கேரள பள்ளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
அனைவரையும் பாலின சார்பின்றி 'டீச்சர்' என்று பொதுவாக அழைப்பதே போதுமானது என அம்மாநில பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.
கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அம்மாநில கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புகிறது.
கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர், ஆசிரியைகளை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என இந்த ஆணையத்திடம் முறையிடப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக்கொண்டு அந்த ஆணையம் புதிய பரிந்துரையை வழங்கி உள்ளதாக அதன் தலைவர் மனோஜ் குமார் கூறினார். இதற்காக அந்த ஆணையம் நியமித்த குழுவானது, உரிய ஆய்வுக்குப் பிறகு இவ்வாறு பரிந்துரைத்துள்ளது என்றும், இது தொடர்பான வழிகாட்டுதலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என மாநில கல்வித்துறையிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் மனோஜ்குமார் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது சமத்துவத்தைப் பேண வழிவகுக்கும் என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

