ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்: கிரிப்டோ கரன்சிக்கு அறவே மதிப்பு இல்லை
புதுடெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது என்றும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"ஒவ்வொரு சொத்துக்கும் குறிப்பிட்ட மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சியைப் பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது. இந்த நடைமுறை எந்த வகையிலும் நிதியாக இருக்காது. எனவே அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்," என சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் கிரிட்ப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு ஆக அதிகமாக ரூ.47 லட்சம் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் அதன் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அதற்கு அறவே மதிப்பு இல்லை என்கிறார்.
"கிரிப்டோகரன்சியின் மதிப்பு அல்லது விலை அதிகரிப்பது என்பது நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மற்ற எந்த அடிப்படையும் இல்லாமல், ஒரு பொருளின் விலை முழுமையாக ஏற்றம் காண்பதும் இறங்குவதும் சூதாட்டத்துக்கு நிகரானது.
"இந்தியாவில் சூதாட்டத்தை அனுமதிக்கவில்லை. அவ்வாறு அனுமதிக்க விரும்பினால், கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தையும் சூதாட்டமாகக் கருதி, உரிய விதிகளை வகுக்க வேண்டியிருக்கும்," என்று சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி என்பது நிதி சார்ந்த விஷயம் அல்ல என்றும் அதைச் சொத்தாகக் கருதுவதும் மிகவும் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கிரிப்டோக்களைச் சட்டப்பூர்வமாக்குவது சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
தமது கருத்துகள் வெறும் எச்சரிக்கையல்ல என்றும் ஓராண்டுக்கு முன்பிருந்தே கிரிப்டோகரன்சியின் மதிப்பு விரைவில் சரிந்துவிடும் எனத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"கடந்த ஓராண்டாக நடப்பதைப் பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரியும். மின்னிலக்கமயமாக்கலுக்கும் கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மின்னிலக்கப் பரிவர்த்தனைகளால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால், கிரிப்டோகரன்சி விவகாரத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

