பீகாரில் 64 மருத்துவர்கள் பணி நீக்கம்
பாட்னா: கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தொடர் விடுப்பு எடுத்த 64 மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து பீகார் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மருத்துவர்கள் ஒரே சமயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகார் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் பலர் முறையான விடுப்பு எடுக்காமல் மாதக்கணக்கில் பணிக்கும் வராமல் உள்ளதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிக்கு வராத 64 மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் எதிர்வரும் 30, 31ஆம் தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே பணி செய்வது, ஊதிய உயர்வு, ஓய்வூதிய முறை புதுப்பிப்பு, ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு தழுவிய அளவில் இப்போராட்டம் நடைபெறும்.
கார் விபத்து: பணியில் அலட்சியம்; காவல்துறையினர் பணியிடை நீக்கம்
புதுடெல்லி: கார் மோதிய விபத்தில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, இளம் பெண் உயிரிழந்தது தொடர்பில், 11 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியில் அலட்சியம் காட்டியதாகக் குறிப்பிட்டு, 11 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். டெல்லியின் கன்ஜவாலா பகுதியில் சில நாள்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோதிய கார் ஒன்று நிற்காமல் சென்றது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம்: அரசு அனுமதி
புதுடெல்லி: மோசடி, வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க ஏதுவாக முகம், கருவிழி ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்யும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

