இண்டிகோ விமானத்தில் உயிருக்கு போராடிய பயணி; விமானம் தரையிறங்கியதும் மரணம்

1 mins read
d5586c61-a9fa-4ba2-b037-32afcfc33739
இண்டிகோ விமானம் 6E-2088ல் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மாண்டவர் வாயிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கினார் (முன்னைய படம்: இந்திய ஊடகம்) -

மதுரையிலிருந்து புதுடெல்லிக்கு சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து விமானம் இந்தூரில் அவசரமாக தரையிறங்கியது. விமான நிலையத்துக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட 60 வயதான பயணி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுல் குப்தா என்பவர் இண்டிகோ விமானம் 6E-2088ல் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று அவர் வாயிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவர் உடல்நிலை மோசமானது. இதனால் விமானம் இந்தூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. குப்தா தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் மருத்துவமனையை அடைந்ததும், அவர் மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குப்தாவிற்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம், நீரிழவு, மாரடைப்பு ஆகியவை இருந்ததாகக் கூறப்பட்டது. உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் குப்தாவின் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.