பொருளியல் நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமா்த்தியா சென் அதிருப்தி
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதால் நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளியல் நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமா்த்தியா சென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. அதன்படி, பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்குக் குடிபெயா்ந்த இந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்துவர்கள், பௌத்த மதத்தினா், சமணா்கள், பாா்சிக்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தினரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதால் அவா்களுக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது.
இது தொடா்பாக பொருளியல் நிபுணா் அமா்த்தியா சென் கூறுகையில், "மதச்சாா்பற்ற, சமத்துவக் கொள்கைகளை மதிக்கும் இந்தியா போன்ற நாடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிருப்தி அளிக்கிறது.
பங்ளாதேஷ், மேற்கு வங்கம் என எந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுபான்மையினரையும் பூா்வகுடி மக்களாக அறிவிக்க வேண்டுமே தவிர வெளிநாட்டவா்களாக வகைப்படுத்தக் கூடாது. மத்திய அரசின் இந்நடவடிக்கை அா்த்தமற்றது மட்டுமின்றி அடிப்படையில் தவறானதும்கூட. நாட்டின் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் பாடுபட்டனர். ஆனால், இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் நாட்டில் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று அமர்த்தியா சென் கூறியுள்ளார். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மையினரின் முக்கியத்துவத்தை இந்தச் சட்டம் குறைத்துள்ளது.
2023 மக்களவைத் தோ்தலில் வட்டாரக் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. திமுக, திரிணாமூல், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும். தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அலை வீசும் என எதிா்பாா்ப்பது தவறானது. இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவான கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கான சமத்துவக் கொள்கையை பாஜக மதிப்பதில்லை. இந்துக்களும், இந்தி பேசுபவா்களும் மட்டுமே இந்தியா்கள் என பாஜக தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.
அடுத்த பிரதமராகும் திறமை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு உள்ளது. எனினும் அவா் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தற்போது வலிமை குறைந்திருந்தாலும், அக்கட்சியே இந்தியாவுக்கான கொள்கையை வழங்கும் திறன் கொண்டது. மற்ற கட்சிகளால் அதை வழங்க முடிவதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிரிவினைகள் காணப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்," என்றாா்.

