பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்க, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகளை பெங்களூர் நகரப் போக்குவரத்துக் கழகம் முன்னதாக அறிமுகப்படுத்தியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூரு நகரப்போக்குவரத்துக் கழகம், 100 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அதையடுத்து, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகமும் மாநிலம் முழுதும் மின்சாரப் பேருந்துச் சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான சோதனை ஓட்டத்தை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.
பெங்களூருவில் இருந்து ராமநகர் வரையிலும் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் மின்சாரப் பேருந்துகளை இயக்க கழகம் திட்டமிட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் மின்சாரப் பேருந்துச் சேவை நேற்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட்டது.
இந்த மின்சாரப் பேருந்துகள் கண்காணிப்புக் கேமரா, இணைய இணைப்பு போன்ற வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளன.
ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட 'ஒலெக்ட்ரோ கிரீன்டெக் லிமிட்டெட்' என்னும் நிறுவனம் இந்தப் பேருந்துகளைத் தயாரித்துள்ளது.
இந்த மின்சாரப் பேருந்துச் சேவை பெங்களூருவில் இருந்து ஷிவமொக்கா, சிக்கமகலூரு, விராஜ்பேட் மற்றும் மடிகேரி போன்ற சிறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கர்நாடகா போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் கர்நாடக மாநிலத்தில் சேவையில் இருக்கும் 35,000 பொதுப் பேருந்துகளையும் மின்சாரப் பேருந்துகளாக மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

