அகமதாபாத்: பண்டிகை கொண்டாட்டத்தின்போது பறக்க விடப்பட்ட காற்றாடிகளின் நூல் கழுத்தை அறுத்ததில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியானது குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உத்தராயண பண்டிகையின்போது பட்டங்களைப் பறக்கவிடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், குஜராத் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் உத்தராயண பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் பல வண்ணங்கள், பல்வேறு வடிவங்களில் உள்ள பெரிய காற்றாடிகள் பறக்க விடப்படுகின்றன.
நடப்பாண்டு இந்தக் கொண்டாட்டத்தின்போது, காற்றாடி நூல் பலரது கழுத்தை பதம் பார்த்துவிட்டது. இதனால் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குஜராத்தின் பவநகர் பகுதி யில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு வயதே ஆன கீர்த்தி என்ற குழந்தையின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்ததில் அவள் பலியானாள்.
இதேபோல் மூன்று வயது பெண் குழந்தை சாலையில் நடந்து சென்றபோது காற்றாடி நூல் கழுத்தில் சிக்கிக் கொண்டது.
அடுத்த சில நொடிகளில் அந்தக் கயிறு கழுத்தை அறுத்ததில் கிஸ்மத் என்ற அந்தச் சிறுமி உயிரிழக்க நேரிட்டது.
உயரமான இடங்களில் நின்று காற்றாடிகளைப் பறக்கவிட்டபோது, தவறி கீழே விழுந்து 46 பேர் காயமடைந்துள்ளனர்.
காற்றாடியைப் பறக்க விடுவதற்குத் தேவைப்படும் மாஞ்சா நூல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தரமற்ற அந்த நூல்தான் பலரது உயிரைப் பறிக்க முக்கியக் காரணமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

