புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலகப் பொருளாதார ஆண்டுக் கூட்டத்தில் 'ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதில் இந்தியாவின் 40 விழுக்காட்டு வளங்கள் ஒரு விழுக்காட்டுப் பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, பாஜக ஆட்சியில் ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமைப் பயணம் பொருளாதார ஏற்றத்தாழ்வை நிரப்பக்கூடிய இயக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 20 கோடி இந்தியர்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்ததாகவும், ஆனால் பாஜக அரசு அவர்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளிவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் சாடியுள்ளார். ஏழை மக்கள் வறுமையில் வாடும் நிலைக்குக் கொண்டுவந்த பாஜக அரசின் கொள்கைகளை எதிர்க்கும் செயலாக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் திகழ்கிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

