புதுடெல்லி: இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்தது தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி சென்றது.
விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதன் கதவை தேஜஸ்வி தற்செயலாக திறந்ததாகவும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருந்ததாகவும் தகவல் வெளியானது. சில தரப்பினர் இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டதாக சர்ச்சை வெடித்த நிலையில், உரிய விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிக்குமாறு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தெரியாமல் அவசரகால கதவை திறந்துவிட்டதாக பாஜக எம்.பி தெரிவித்ததாக மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விவகாரத்தை ஏன் மூடி மறைக்கவேண்டும் எனும் கேள்வி எழுந்து சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

