திருவனந்தபுரம்: இந்தியாவில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் பாஜக மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட அக்கட்சி பெற்ற நன்கொடைகள் 154 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் பாஜக, 752 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றிருந்தது. நடப்பாண்டில் அத்தொகையானது ரூ.1,917 கோடியாக உயர்ந்துள்ளது. இது 154% அதிகமாகும்.
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது திரிணாமூல் காங்கிரஸ்.
அக்கட்சிக்கு நன்கொடையாக நடப்பாண்டில் ரூ.545.7 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.541.2 கோடி கிடைத்தது.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகள் ரூ.285.70 கோடி. தற்போது அது 89% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள எட்டு தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.3,289 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. மாநில கட்சிகளில் திமுக கடந்த நிதியாண்டில் ரூ.318.7 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

