துறவறம் பூண்ட கோடீஸ்வரர் மகள்
சூரத்: குஜராத்தில் பிரபலமான சங்வி அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் தானேஷ்-அமி சங்வி தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், 9 வயது மூத்த மகள் தேவன்ஷி என்பவர் கோடிகளையும் ஆசா பாசங்களையும் துறந்து எளிய துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளார். ''தேவன்ஷி சிறுவயதிலேயே துறவிகளுடன் 700 கி.மீ. தூரத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இத்துறவற வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு உள்ளார்,'' என குடும்ப நண்பர் நீரவ் ஷா கூறியுள்ளார்.
பனிமூட்டம்: 16 ரயில்கள் தாமதம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இம்மாதத்தில் மட்டும் எட்டு முறை குளிர் அலை வீசியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி மக்கள் கோரியுள்ளனர்.
'தலாக்' கூறியவர் மீது வழக்கு
இந்தூர்: ராஜஸ்தானின் கஜ்ரானா பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர், தனக்கு ஏற்கெனவே நடந்த மூன்று திருமணங்களையும் குழந்தைகளையும் மறைத்து 'மேட்ரிமோனி' வலைத்தளம் வாயிலாக அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த உண்மைகளை அறிந்துகொண்ட நான்காவது மனைவி தகராறு செய்ததால், திருமணப் பந்தத்தை முறித்துக்கொள்வதாக மூன்று முறை 'தலாக்' என எழுதி அதை கைப்பேசி வழி அனுப்பி வைத்துள்ளார் இம்ரான். திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 'முத்தலாக்' தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் கஜ்ரானா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாதவிடாய், மகப்பேறு விடுமுறை
திருவனந்தபுரம்: பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் நாட்டிலேயே முதல்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய், மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி உள்ளது கேரள அரசு. இப்போது முதல் கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்நடைமுறை அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ள கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, 18 வயதுக்கு மேலான மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

