குடியரசு தினத்தையொட்டி கண்காணிப்பு தீவிரம்; கனடா தீவிரவாதியின் கூட்டாளிகள்
புதுடெல்லி: கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதியின் கூட்டாளிகள் இருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதிச்செயல்களை அரங்கேற்றக்கூடும் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு பயங்கரவாதிகள் கைதாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
பஞ்சாப் மாநிலம் குர்தாபூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் பட்டி, பிரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கன்வல்ஜீத் சிங் ஆகிய இருவரும் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்கள் கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி லக்பிர் சிங் லந்தாவின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது.
இரு பயங்கரவாதிகள் மீதும் பல்வேறு கொலைகள், சதிச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் சதிச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பஞ்சாப் காவல்துறை இவர்களைத் தீவிரமாகத் தேடி வந்ததாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று டெல்லி காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது.
விரைவில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவையொட்டி பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

