செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
280311c5-2cd6-4866-85af-e5f0fb007b72
-

ஒரு நபர், ஒரு கார் கொள்கை:

மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

புதுடெல்லி: காற்று மாசு அதிகரித்து வருவதையடுத்து, நாடு முழுவதும் 'ஒரு நபருக்கு ஒரு கார்' என்ற கொள்கையை மத்திய அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 'சுனாமி ஆன் ரோட்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் இது தொடர்பான பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தனர்.

கலப்பட பால் விற்பனை வழக்கில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

லக்னோ: கலப்பட பால் விற்பனை தொடர்பாக 32 ஆண்டுகளுக்குப் பிறகு பால் வியாபாரிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கபீர் சிங் என்பவர் மீது 1990ஆம் ஆண்டு கலப்பட பால் விற்பனை செய்ததாக வழக்குப் பதிவானது. உணவுப்பொருள் ஆய்வாளர் அளித்த விசாரணை அறிக்கையின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கபீர் சிங்குக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தார் நீதிபதி.

கைப்பேசி கோபுரத்தை திருடிய கும்பல்

பாட்னா: பீகார் மாநிலம், பிர்போர் பகுதியில் திருட்டுக் கும்பல் ஒன்று கைப்பேசி கோபுரத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏறத்தாழ முப்பது அடி உயரமுள்ள அந்தக் கைப்பேசி கோபுரம் ரூ.8.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிர்போர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற சிலர், கைப்பேசி நிறுவன ஊழியர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, கைப்பேசி கோபுரத்தில் ஏற்பட்டுள்ள கோளாற்றைச் சரிசெய்ய வந்ததாகக் கூறியுள்ளனர். அதன் பின்னர் நான்கு மணி நேரத்தில் அந்தக் கோபுரத்தை முழுதாக கழற்றி திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது.

சீருடைக்கு அறிவுசார் சொத்துரிமை

புதுடெல்லி: இந்திய ராணுவச் சீருடைக்கு அறிவுசார் சொத்துரிமை பெறப்பட்டுள்ளது. வடிவமைப்பு, தனித்துவம் உள்ளிட்ட அம்சங்களுக்காக அச்சீருடைக்கு இந்திய ராணுவம் அறிவுசார் சொத்துரிமை வாங்கி உள்ளதாகவும் அனுமதியின்றி அச்சீருடையை உற்பத்தி ெசய்து வெளிச் சந்தையில் விற்கமுடியாது என்றும் தெரிய வந்துள்ளது.