செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c74a0b41-f4c4-458c-9b27-d0d76ce0574b
-

திருப்பதி கோவிலுக்கு மேல் பறந்த ஆளில்லா வானூர்தி

திருமலை: ஏழுமலையான் கோவிலின் மேல் ஆளில்லா சிறிய வானூர்தி பறந்ததாக பரவிய தகவலும் அது தொடர்பான காணொளியும் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இது வெறும் வதந்தி என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். திருப்பதி கோவில் உள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வானூர்தி பறந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர். சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ரூ.268 கோடி செலவில்

அம்பேத்கருக்கு 206 அடியில் சிலை

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பபட்டினத்தில் ரூ.268 கோடி செலவில் 206 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிலை அமைக்க 352 டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்தச் சிலைக்கான வளாகத்தில் ஒரே சமயத்தில் இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகளை அமைக்கும் குழுவினருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

'சாலையோர வியாபாரிகளுக்கு இனி காவல்துறை தொல்லை இருக்காது'

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு மிக விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளுக்கு காவல்துறையினரால் ஏற்படும் தொல்லைகள் தடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. நேர்மையாக உழைத்து வாழும் சாலையோர வியாபாரிகளின் சுய மரியாதைக்கு பாதகம் ஏற்படாதபடி காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். "நாட்டிற்கு நீங்கள் அனைவரும் சொத்து. தரமான பொருள்களை நீங்கள் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். உங்கள் மீது எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. வாங்கிய கடனுக்கு நாள்தோறும் வட்டி கட்டும் அவல நிலையில் இருந்து சாலையோர வியாபாரிகளைக் காப்பதற்கும் காவல்துறையால் ஏற்படும் தொல்லைகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் டி.கே.சிவக்குமார்.