லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோத ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதை நடத்தி வந்தவர் உட்பட இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 34 நவீன, நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் டெல்லியில் இயங்கி வரும் சமூக விரோதிகளுக்கும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கும் விநியோகிக்கப்பட இருந்தது விசாரணையில் அம்பலமானது.
குடியரசு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து, சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்படுன்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோத ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்திருப்பது அம்மாநில அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கைதான நவீன் ராணா, சலீம் ஆகிய இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நவீன் ராணா டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது பத்து துப்பாக்கிகள் இருப்்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சலீம் (39 வயது) சிக்கினார். நவீன் ராணாவின் சகோதரர் ஆசிஃப் உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மூலமாக சலீமுக்கு தாம் அறிமுகமானதாகவும் சலீமிடம் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்களைப் பெற்று, டெல்லியில் உள்ள பல்வேறு குண்டர் கும்பல்களுக்குத் தாம் விநியோகித்ததாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கள்ளத் துப்பாக்கிகளைத் தயாரித்து விநியோகிப்பது, அவற்றை வாங்கி சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துவது, கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் கும்பலை மொத்தமாக பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.
கைதான இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாம்லி மாவட்டத்தில் டெல்லி, உத்தரப் பிரதேச காவல்துறைமேற்கொண்ட நடவடிக்கையின்போது அங்குள்ள கரும்புத் தோட்டத்துக்கு மத்தியில் ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. அங்கிருந்து ஏராளமான வெடிபொருள்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில தினங்களில் மட்டும் 34 துப்பாக்கிகள் சிக்கியுள்ளன.
இது தொடர்பான விசாரணையும் தேடுதல் வேட்டையும் நீடிக்கும் நிலையில், இரு மாநிலங்களிலும் குடியரசு தினத்தையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தினத்தையொட்டி தீவிர பாதுகாப்பு: இருவர் கைது; 34 துப்பாக்கிகள் பறிமுதல்

