செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0f566cee-d46d-401c-b48e-24abed1a5955
-

வாராந்திரத் தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது

சென்னை: இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு வாராந்திர கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் 22-29 வரையிலான ஒருவார காலத்தில் தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அன்றாட தொற்று எண்ணிக்கையும் கட்டுக்குள் உள்ளது.

300 இடங்களில் மவுனப் போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், மாநில அரசின் ஊழல்களைக் கண்டித்து பெங்களூரில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

போதைப்பொருளுடன் ஊடுருவிய ஆறாவது வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது

சண்டிகர்: ஐந்து கிலோ ஹெராயினுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஆளில்லா வானூர்தியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக இருவர் கைதாகினர். கடந்த 21ஆம் தேதியன்று நள்ளிரவில் பஞ்சாப் மாநிலத்தையொட்டி உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அந்த வானூர்தி வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அதை சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்்்். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயன்ற இருவர் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள்களுடன் ஊடுருவ முயன்ற ஆறு ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

விசா முடிந்தும் இந்தியாவிலேயே

தங்கியுள்ள 3.5 லட்சம் வெளிநாட்டினர்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3.5 லட்சம் பேர் விசா காலம் முடிவடைந்த பிறகும் இந்தியாவிலேயே தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு முறைகேடாக தங்கி இருப்பவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசா இன்றி சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு உதவி செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நிலநடுக்கத்தால் டெல்லியில் பீதி

புதுடெல்லி: நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லி வாழ் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவியது. நேப்பாளத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.