பாட்னா: பீகார் மாநிலத்தில் எழுபது வயது முதியவர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றதில் அவர் எட்டு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அந்த கார் அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அண்மையில் டெல்லியிலும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது கார் மோதியதில், அதன் கீழ்ப்பகுதியில் சிக்கிய அவர் சில கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழ்ந்த கொடூரம் அரங்கேறியது.
பீகாரில் உள்ள சம்பரான மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் சவுதார் என்ற முதியவர் நேற்று முன்தினம் தனது கிராமத்துக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையை மிதிவண்டியில் கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் விழுந்த முதியவர் சங்கர் சவுதார், முன்கண்ணாடியில் உள்ள துடைப்பான்களைப் (வைப்பர்) பிடித்துக்கொண்டு, காரை நிறுத்தும்படி கூச்சலிட்டுள்ளார்.
இந்த விபத்தை நேரில் கண்ட சிலர் முதியவரைக் காப்பாற்ற விரைந்தனர். ஆனால் கார் ஓட்டுநரோ, காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
சில கிலோ மீட்டர் தூரம் சென்றதும் ஓட்டுநர் திடீரென காரை நிறுத்த, முதியவர் தூக்கி வீசப்பட்டார். தன்னை சிலர் பின்தொடர்வதைக் கண்ட ஓட்டுநர், காரை மீண்டும் இயக்கியபோது, சாலையில் விழுந்து கிடந்த முதியவர் மீது அது ஏறிச்சென்றது. இதில் முதியவர் சங்கர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்தக் கார் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஓட்டுநருக்கு வலைவீசப்பட்டுள்ளது.