புதுடெல்லி: நேப்பாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் உணர்ந்தனர்.
வீடுகள், கட்டடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் திரண்டனர்.
டெல்லியில் ஏறத்தாழ 30 விநாடிகள் வரை நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகளில் இருந்த பொருள்கள் உருண்டன.
ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
அங்கு அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி, சாலையில் குவிந்தனர்.
டெல்லி உட்பட எந்த மாநிலத்திலும் பொருள்சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது நிம்மதி அளிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருமுறையும் நடப்பு ஜனவரியில் ஏற்கெனவே இருமுறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

