கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவர் பலி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியாகினர். அங்குள்ள ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்தது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். காவல்துறையினரும் ராணுவத்தி னரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின்போது பலர் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது உரிய அனுமதி இன்றி அந்தக் கட்டடம் கட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கட்டட உரிமையாளரான சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏவின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டது
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை நாட்டின் 99 விழுக்காடு மக்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். இந்நிலையில், தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய நான்கு வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
ஜெய்ப்பூர்: ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் வைக்கப் பட்டிருந்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அங்குள்ள விகாஸ் சங்வான் பகுதி யில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு நள்ளிரவில் வந்த கொள் ளையர், அங்கிருந்த இயந்திரத்தை உடைக்க முயன்றனர். நீண்ட நேரம் போராடியும் இயந்திரத்தை உடைக்க முடியாத தால், அதை அப்படியே பெயர்த்தெடுத்து தாங்கள் வந்த வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அதில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருந்ததாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
19 பள்ளி மாணவர்களுக்கு 'நோரோ'
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு நோரோ கிருமித்தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சில மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
புதுடெல்லி: எதிர்வரும் 30, 31ஆம் தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கிப் பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
புதிய மின்னிலக்க அடையாள அட்டைக்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுக்கு புதிய மின்னிலக்க அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு அடையாள அட்டைகள் இருக்கும்போது மூன்றாவது அட்டை எதற்கு என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

