செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7182df2f-f0c4-4121-a0a7-15fce8f3afd3
-

2,000 ரூபாய் திருமண அழைப்பிதழ்

திருப்பதி: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற வியாபாரி, தனது மகளின் திருமண அழைப்பிதழை 2,000 ரூபாய் பணத்தைப் போன்று அச்சடித்து வழங்கி வருகிறார்.

அழைப்பிதழை வியப்புடன் வாங்கும் பலரும் 2,000 பணத்தைப் பெறுவதுபோல் உணர்வதாகக் கூறியுள்ளனர்.

ரூ.2,000 பணம் போன்ற அதே அளவிலான காகிதத்தில், மணமக்கள் பெயர்களை முன்புறமும் திருமண விவரங்களைப் பின்புறத்திலும் அச்சடித்து உள்ளார். வெங்கடேஷ், ஏற்கெனவே தன் மூத்த மகளின் திருமண அழைப்பிதழை ஏடிஎம் அட்டை வடிவில் அச்சடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

உடுப்பியில் நடமாடும் தகன மேடை

பெங்களூரு: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2021ஆம் ஆண்டில் 140 கோடியைத் தாண்டி இருந்த நிலையில், இன்னும் ஆங்காங்கே தலித் சமூகத்தினரை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், முதூர் கிராமத்தில் உயிரிழப்பவர்களை 40 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது. இதற்கு முதூர் கூட்டுறவு வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கேரளாவில் இருந்து ஆறு லட்சம் செலவில் நடமாடும் தகன மேடையை வாங்கி, முதூர் மக்களுக்கு வழங்கியுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இதற்காக கட்டணம் எதுவும் செலுத்தவேண்டாம் எனவும் வங்கி கூறியுள்ளது.

'நேர மேலாண்மை குறித்து அம்மாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்'

புதுடெல்லி: மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் 'பரிக் ஷா இ சார்ச்சா' நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, "நேர மேலாண்மை தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியம். உங்கள் அம்மா எப்படி நேரத்தைப் பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதன்மூலம் நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல் படுவது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்," என்றார்.