சிந்து நதிநீர் ஒப்பந்தம்: மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்து
புதுடெல்லி: சிந்து நதிநீர் தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பாகிஸ்தான் மீறுவதாக இந்தியா சுட்டிக்காட்டி உள்ளது. இதையடுத்து விதிமீறல்களைத் தடுக்கும் விதமாக ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த 1960ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, சிந்து நதியில் இருந்து இந்தியா மின்சாரம் உற்பத்தி செய்கிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் தொழில்நுட்ப ரீதியில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மருத்துவ மாணவியை ஆணவக் கொலை செய்த ஐந்து பேர் கைது
மும்பை: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவியை ஆணவக் கொலை செய்த தந்தை உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகினர். மகாராஷ்டிர மாநிலத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சுபாங்கி ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்தபோது தாம் காதல் வயப் பட்டிருப்பதாக கூறியுள்ளார். திருமணம் தடைபட்டது. இதனால் ஆவேசம் அடைந்த சுபாங்கியின் தந்தை, அண்ணன், மாமா உள்ளிட்ட ஐந்து பேர் அவரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை எரித்து சாம்பலை உள்ளூர் கால்வாயில் கரைத்துவிட்டனர். எனினும், கொலை விவகாரம் வெளியே கசிந்ததில் ஐந்து பேரை காவல்துறை செய்துள்ளது.
ரூ.366 கோடி ஜிஎஸ்டி: அதிர்ந்துபோன சாலையோர துணி வியாபாரி
லக்னோ: சாலையோர துணி வியாபாரி ஒருவர் தாம் ரூ.366 கோடியை ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போனார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த 40 வயது ஆடவரை நேற்று முன்தினம் அதிகாரிகள் தேடி வந்து இவ் விவரத்தை தெரிவித்தனர். தனது ஜிஎஸ்டி வரிக்கணக்கை யாரோ முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளனர் என்றும் சம்பந்தப்பட்டவர்களை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண் டும் என்றும் அந்த வியாபாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

