புதுடெல்லி: வீட்டில் இருந்தபடி பணியாற்றலாம் என்ற அறிவிப்பை நம்பி முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். அவர்களிடம் இருந்து மோசடிக் கும்பல் ஒன்று ரூ.200 கோடி வரை ஏமாற்றி உள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக இந்த மோசடி அரங்கேறி வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக நான்கு பேர் கைதாகினர். முக்கிய குற்றவாளி ஒருவர் ஜார்ஜியா நாட்டில் தங்கி இருப்பதும் இக்கும்பல் பிறரை ஏமாற்றி வசூலித்த கோடிக்கணக்கான பணம் துபாயில் இருந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி மோசடிக்கும்பலால் பணத்தை இழந்த ரோகிணி என்ற பெண்மணி காவல்துறையில் புகார் அளித்தார்.
வீட்டில் இருந்தபடி பணியாற்றினால் நாள்தோறும் 15,000 ரூபாய் பணம் ஈட்டலாம் என்ற அறிவிப்பை இணையத்தளத்தில் பார்த்த அவர், தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் சமூக ஊடகங்கள் வழி அவரைத் தொடர்புகொண்ட ஒருவர், தனியார் நிறுவனத்தின் பொருள்களின் விற்பனை அளவை உயர்த்த வேண்டும் என்றும் அது தொடர்பாக இணையம் வழி சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்ட இணையத்தளத்தைப் பயன்படுத்தி வேலை பார்க்க தொடங்கியதை அடுத்து, இணையம்வழி செயல்படும் குறிப்பிட்ட ஒரு செயலி மூலம் தனது கணக்கில் நாள்தோறும் சம்பளப்பணம் அதிகரித்து வருவதைப் பார்த்துள்ளார் ரோகிணி.
இந்நிலையில், இணையம் வழி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் சில பொருள்களை வாங்குமாறு அவர் பணியாற்றிய போலி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இதனால் சுமார் 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்குவதற்கு பணம் செலுத்தி உள்ளார் ரோகிணி.
ஆனால், பொருள் எதுவும் வந்து சேரவில்லை. அதே சமயம் மேலும் அவருக்கு நாள்தோறும் ஊதியம் வழங்குவதாக காட்டப்பட்ட கணக்கும் பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது.
காவல்துறை விசாரித்தபோது, மோசடிக் கும்பல் சீனாவில் இருந்து இயங்குவதும், அவர்கள் பயன்படுத்திய சமூக ஊடக கணக்குகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்டதும் உறுதியானது. இக்கும்பலுக்கு உதவிய நால்வர் கைதாகினர். இக்கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் இணைந்து மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் பணத்தை மோசடியாக வசூலித்துள்ளது.

