புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், அந்நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இதற்கிடையே, அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.40 லட்சம் கோடி குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அவர், தற்போது ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அதானி குழுமங்களில் முதலீடு செய்துள்ள எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ரூ.77 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.53,000 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.
இதனால் எல்ஐசிக்கு ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதேபோல, எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.54,618 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இருந்தும்கூட அதானி குழுமத்தில் எல்ஐசி மேலும் ரூ.300 கோடியும் எஸ்பிஐ ரூ.225 கோடியும் முதலீடு செய்திருப்பது ஏன்?
"ரிசர்வ் வங்கி, சிபிஐ, செபி, அமலாக்கத்துறை ஆகியவற்றுடன் மத்திய நிதி அமைச்சரும்கூட இந்த விவகாரம் தொடர்பாக வாய் மூடி மவுனம் காப்பது ஏன்," என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கிடையே புதிய பங்குகளை விற்பதன் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட அதானி குழுமங்கள் திட்டமிட்ட நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையால் அப்பங்குகளை வாங்குவதில் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எனவே புதிய பங்குகளின் விலையை குறைக்கவும் விற்பனை கால அளவை நீட்டிக்கவும் அதானி குழுமம் யோசித்து வருகிறது.

