எல்லையில் 135 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைக்கான பணிகள் தொடங்கின
லடாக்: இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதியில் 135 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை அமைப்பதற்கான பணிகளை இந்தியா தொடங்கி உள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் இந்தப் புதிய சாலை அமைக்கப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தப் பணி குடியரசு தினத்தன்று தொடங்கியுள்ளது என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பணி முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஷிமத்தில் புதிய பாதிப்புகள் இல்லை என்கிறது மாநில அரசு; மக்கள் மறுப்பு
டேராடூன்: ஜோஷிமத் நகரில் கடந்த 20ஆம் தேதி முதல் புதிதாக கட்டடங்களில் எந்தவித விரிசலும் ஏற்படவில்லை என உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் அரசாங்கம் உண்மையான தகவல்களை அளிக்கவில்லை எனப் புகார் எழுப்பியுள்ளனர். தொடக்கத்திலேயே அரசாங்கம் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. "புனித நகரமான ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இயற்கைப் பேரிடர்் என்று முதல்வர் கூறுவதை ஏற்க இயலாது. அந்நகரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதைப் போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயற்சி செய்கிறது," என சங்கர்ஷ் சமிதி என்ற சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறைக் கைதிகளுக்காக இயங்கும் புதிய வானொலி நிலையம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள தஸ்லா சிறைச்சாலையில் கைதிகளுக்காக புதிய வானொலி தொடங்கப்பட்டுள்ளது. ஆன்மீகம், கல்வி, பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் இந்த வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. சிறையில் உள்ள திறமையான கைதிகளால் வானொலி நிலையம் இயக்கப்படும் என்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இசை நிகழ்ச்சிகள் மூலம் மன அமைதி கிடைக்கிறது என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

