புதுடெல்லி: அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தன. அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறுவனங்களுக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு காரணமாக எல்ஐசி, எஸ்பிஐ பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு மதிப்பு ரூ.78,000 கோடி சரிந்துள்ளது. இருப்பினும், மீண்டும் எல்ஐசி ரூ.300 கோடி, எஸ்பிஐ ரூ.225 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்கின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும், மத்திய நிதி அமைச்சகமும் ஏன் இன்னும் அமைதி காக்கின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

