புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 6.1 விழுக்காடாக இருக்கும் என அனைத்துல நாணய நிதியம் ('ஐஎம்எஃப்') கணிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறித்து அனைத்துலக நிதியம் கணித்ததில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிதியத்தின் ஆய்வுத்துறை தலைமை பொருளியல் நிபுணரும் இயக்குநருமான பியர் ஒலிவியர் கூரின்சாஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் இந்தியப் பொருளியல் வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்றும் எனினும் மார்ச் மாதத்துக்குப் பின்னர் வளர்ச்சியில் சரிவு ஏற்படும் என்றும் 'ஐஎம்எஃப்' கணிப்பு கூறுகிறது.
"இந்த வீழ்ச்சிக்கு வெளிவட்டார அழுத்தங்களே பெரும் காரணமாக இருக்கும். எனினும் 2024ஆம் ஆண்டு இந்தியப் பொருளியல் வளர்ச்சியானது மீண்டும் 6.8% ஆக அதிகரிக்கும் என அந்நிதியம் கணித்துள்ளது.
பொருளியல் வளர்ச்சியில் மந்த நிலை காணப்படும் என்பது பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், இந்தியாவில் பண வீக்கம் குறையும் என்று இப்புதிய கணிப்பு கூறுகிறது.
"எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 விழுக்காடாக இருக்கும். அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் அது ஐந்து விழுக்காடாக மேலும் குறையும்.
"2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் 4% ஆகக் குறையும்," என்கிறார் அனைத்துலக நிதியத்தின் ஆய்வுத் துறையின் வட்டாரத் தலைவர் டேனியல் லே.
இந்நிலையில் அனைத்துலகப் பொருளியல் வளர்ச்சியானது 2022ஆம் ஆண்டு 3.4% ஆக இருக்கும் எனில், நடப்பு 2023ல் அது 2.9ஆகக் குறையும் என்கிறது ஐஎம்எஃப். எனினும் 2024ல் மீண்டும் 3.1 விழுக்காடாக வளர்ச்சி காணும் என்றது அது.
மேலும், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலகப் பொருளியல் வளர்ச்சியில் இந்தியா, சீனாவின் பங்களிப்பு சரிபாதியாக இருக்கும் என்றும் அனைத்துலக நாணய நிதியம் கணித்துள்ளது.

