ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் அறிவிப்பு
புதுடெல்லி: ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துலக தூதரக ஒத்துழைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மிக விரைவில் தாம் விசாகப்பட்டினத்தில் குடியேறப் போவதாகக் குறிப்பிட்டார். "ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாநிலத் தலைமையகமாக விசாகப்பட்டினம் செயல்படும். அது ஆளுநரின் தலமாகவும் இருக்கும். ஆனால், ஆந்திர சட்டப்பேரவை அமராவதி நகரில்தான் இயங்கும்," என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
பிபிசி ஆவணப்பட தடை: எதிர்க்கும் மனுக்கள் மீது 6ஆம் தேதி விசாரணை
புதுடெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின் கீழ் பிபிசி ஊடகத்தின் ஆவணப்படத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 'இந்து' என்.ராம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொயித்ரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவும் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை, அடிப்படை உரிமை மீறல் என அவர் சாடியுள்ளார்.
கோரக்பூர் கோவில் மீது தாக்குதல்: பயங்கரவாதிக்கு மரண தண்டனை
லக்னோ: கோரக்பூர் கோவில் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அக்கோவிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செல்லத் திட்டமிட்டிருந்தார். முன்னதாக ஆயுதங்களுடன் அக்கோவிலுக்குள் நுழைந்த அகமத் முர்டாசா என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் மேற்கொண்டார். இதில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பியோடிய அகமத் முர்டாசாவை அங்கிருந்த பொதுமக்கள் வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர் இந்தியாவின் முதல்நிலை கல்வி அமைப்புகளில் ஒன்றான ஐஐடியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர் எனத் தெரியவந்தது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததும் அம்பலமானது. இந்நிலையில், கோவில் தாக்குதல் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

