போபால்: நண்பரின் அடையாள அட்டையைத் திருடிய ஒருவர், அரசுப் பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் பணியாற்றியது இப்போது தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நரசிங் தேவாங்கன் என்பவர் 1984ஆம் ஆண்டு தனது நண்பரான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையைத் திருடியுள்ளார். பின்னர் அதை வைத்து அரசுப் பணியிலும் சேர்ந்துள்ளார்.
நிலக்கரிச் சுரங்க ஊழியராகப் பணியாற்றிய அவர் கடந்த 2020ஆம் ஆண்டு காலமானார்.
இதையடுத்து அரசு ஊழியருக்கான கருணைத் தொகையையும் இதர பலன்களையும் பெறுவதற்காக அவரது குடும்பத்தார் விண்ணப்பித்தபோது தான் ஆள் மாறாட்ட மோசடி அம்பலமானது.
மேலும், நரசிங் தேவாங்கனின் நண்பரான தாதாய்ராம் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பதும் அவரது குடும்பம் வறுமையில் வாடுவதும் தெரியவந்தது.
தன் தந்தையின் அடையாள அட்டையைத் திருடிய நரசிங் தேவாங்கனும் அவரது குடும்பத்தாரும் நல்ல நிலையில் இருப்பதை அறிந்து கடும் கோபமடைந்துள்ள நரசிங் தேவாங்கனின் மகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நரசிங் தேவாங்கன் பெற உள்ள ஓய்வூதியத்தை தனது தந்தைக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

