புதுடெல்லி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து தமிழக எம்பிக்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் பங்கேற்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்தப் பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை.
புதிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கவில்லை. இதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.