பீகார்: தேர்வுக்கூடத்தில் தன்னைத் தவிர மற்ற அனைவருமே பெண்களாக இருந்ததைக் கண்டு மாணவர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது.
பீகார் ஷரிஃப் பகுதியைச் சேர்ந்த மணீஷ் சங்கர் பிரசாத் என்ற அந்த 17 வயது மாணவர், கடந்த புதன்கிழமை 12ஆம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வெழுதுவதற்காகச் சற்று முன்னதாகவே தேர்வு நடக்கும் பள்ளிக்குச் சென்றுவிட்டார்.
தேர்வுக்கூடத்திற்குச் சென்றதும்தான் அங்கு 500 மாணவிகள் இருந்ததையும் தான் ஒருவனே ஆடவர் என்பதையும் அவர் உணர்ந்தார்.
அதனால், ஏற்கெனவே கூச்ச சுபாவம் கொண்ட மணீஷ், உடல் நடுக்கம் எடுத்து, அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
அச்சத்தில் தலைவலியும் காய்ச்சலும் சேர்ந்துவிடவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் வியாழக்கிழமை அவர் தேர்வெழுதச் செல்லவில்லையாம்.
இந்நிலையில், விண்ணப்பப் படிவத்தில் மணீஷ் தனது பாலினத்தைப் 'பெண்' என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் அதனால் அவருக்கு மாணவிகளுக்கான தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

