புதுடெல்லி: வழக்கத்திற்கு மாறாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்த வழக்கு விசாரணையை இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூடுடன் சேர்ந்து சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் நேரில் பார்வையிட்டார்.
இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனை வரவேற்றதாக 'த இண்டியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்தது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 73வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் 'மாறி வரும் உலகில் நீதித் துறையின் பங்கு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மூத்த வழக்குரைஞர்கள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மற்ற நீதிபதிகளுடன் திரு சுந்தரேஷ் மேனன் ஆலோசனை நடத்தவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது சட்டக் கல்வி, நிதி வழங்கல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்திய-சிங்கப்பூர் நீதிமன்றங்கள் இடையே நல்லுறவை மேம்படுத்துவது குறித்து அவர்கள் பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்திய உச்ச நீதிமன்றம், 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி நிறுவப்பட்டது.

