சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 36 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் ஐந்து நாள்கள் நடைபெறும் நிபுணத்துவ பயிற்சித் திட்ட நிகழ்வில் அவர்கள் பங்கேற்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கல்வி அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 கல்வியாளர்கள் கொண்ட குழுவின் பயணத்தைப் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற நிகழ்வின்போது அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
"இந்தப் பயணத்தின் மூலம் கல்வித்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களைத் தலைமையாசிரியர்கள் அறிந்துகொள்ள முடியும். பயணம் முடிந்து நாடு திரும்பிய பின்னர் மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
"இதனால் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க முடியும்," என்றார் முதல்வர் பகவந்த் மான்.
இந்திய தலைமையாசிரியர் குழுவுக்கு சிங்கப்பூரில் உள்ள தலைமையாசிரியர் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படும்.
வரும் மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இதேபோல் தலைமையாசிரியர்களைக் கொண்ட இரண்டாவது குழு சிங்கப்பூருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள தலைமையாசிரியர் அகாடமியில் இந்தியாவைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

