லக்னோ: திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்ற ஒருவர் உற்சாகத்தில் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டபோது, அருகில் இருந்தவர் மீது குண்டு பாய்ந்து இறந்து போனார். இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறை விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அங்குள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
அப்போது விஷால் என்ற ஆடவர் உற்சாக மிகுதியில் தாம் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கிச் சுட்டார்.
அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாகக் குரலெழுப்பினர். இந்நிலையில் விஷால் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டபோது, எதிர்பாராதவிதமாக அவருக்கு அருகில் நின்றிருந்த 24 வயதான சரத், ராஜ்குமார் ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் இளையர் சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

