மும்பை விமான நிலையத்தில் பதற்றம்
மும்பை: மர்ம ஆடவர் ஒருவர் செய்த அச்சுறுத்தல் அழைப்பு காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையம் பதற்றத்துக்கு உள்ளானது. இந்தியன் முஜாஹிதீன் எனப்படும் தீவிரவாதக் குழுவின் உறுப்பி னர் எனத் தம்மைச் சொல்லிக்கொண்ட அவர் தமது பெயர் இர்ஃபான் அகமது ஷேக் என்றும் விமான நிலை யத்துடன் தொடர்புகொண்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை முதல் அந்த விமான நிலை யத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விஸ்தாராவுக்கு ரூ.70 லட்சம் அபராதம்
புதுடெல்லி: விதிமுறைகளை மீறியதற்காக விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் ரூ.70 லட்சம் அபராதம் விதித்து உள்ளதாக ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விதிமீறல் நடைபெற்றதாகவும் அபராதம் இந்த மாதம் செலுத்தப்பட்டதாகவும் அச்செய்தி கூறியது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் விமானப் போக்கு வரத்தைச் சரியாகக் கையாளததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
மெஸ்ஸியின் சட்டை அன்பளிப்பு
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அர்ஜெண்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியின் சிறப்புச் சட்டை ஒன்று பிரதமர் மோடிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. ஒய்பிஎஃப் எனப்படும் அர்ஜெண்டினா எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் பாப்லோ கோன்ஸாலெஸ் இதனை வழங்கினார். படம்: ஊடகம்
சம்பளம் கேட்டு அர்ச்சகர் போராட்டம்
புதுடெல்லி: தங்களுக்குச் சம்பளம் தரக் கோரி தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அரசாங்கம் தங்களுக்கு இதுவரை எந்தவோர் ஊதியத்தையும் அளிக்க வில்லை என்றும் ஊதியம் தரப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அர்ச்சகர் சங்கம் அறிவித்துள்ளது.
திருடனின் விரலை துண்டாக்கிய மாது
கௌஷாம்பி: உத்தரப் பிரதேசத்தின் கௌஷாம்பி மாவட்டத் தில் விநோத சம்பவம் ஒன்று நடந்தது. மயோஹார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரீட்டா தேவி எனப்படும் அந்தப் பெண் சந்தைக்குச் சென்று திரும்புகையில் வழிமறித்த திருடன் அந்தப் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலி, கொலுசு போன்றவற்றைப் பறித்தான். அப்போது உரக்கச் சத்தமிட்ட ரீட்டாவின் வாயை திருடன் பொத்தி னான். உடனே திருடனின் விரல் ஒன்றை வெறித்தன மாகக் கடித்தார். அதற்குள் ஊர்மக்கள் ஓடிவர, திருடன் தப்பிக்க முயன்றபோது விரல் துண்டாகி விழுந்தது. இருப்பினும் அந்த இடத்தைவிட்டு திருடன் ஓடிவிட்டான். துண்டிக்கப்பட்ட விரலுடன் காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறினார் ரீட்டா. வழக்குப் பதிவு செய்து திருடனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

