பாட்னா: சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பாந்தாவ்ல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது.
இந்தச் சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை மர்மக் கும்பல் ஒன்று திருடி விற்றுள்ளது.
தண்டவாளத் துண்டுகளோடு ரயில்வேக்குச் சொந்தமான இதர பொருள்களும் திருடி விற்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து கடந்த மாதம் 24ஆம் தேதிதான் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
இந்தத் திருட்டுச் சம்பவம் பற்றி அறிந்த ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு ஊழியர்கள் இருவரை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர் ஜனவரி 19ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் கைபேசிக் கோபுரம் ஒன்று திருடப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.