புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இத்தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது பதிலில் கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாடு செல்வோர் வாய்மொழியாகத் தெரிவிக்கும் தகவல், அவர்களுக்கு வழங்கப்படும் மாணவர்களுக்கான விசா வகை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
"கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 7.5 லட்சம் பேர் உயர்கல்விக்காகச் சென்றுள்ளனர். இதுபோல, 2021ஆம் ஆண்டில் 4.4 லட்சம், 2020ஆம் ஆண்டில் 2.59 லட்சம் பேர் உயர்கல்வி பெற இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
"2019இல் இந்த எண்ணிக்கை 5.8 லட்சமாகவும் 2018இல் 5.1 லட்சமாகவும் 2017இல் 4.5 லட்சமாகவும் உள்ளது," என்று இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார்.

