புதுடெல்லி: எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது என திமுக மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தது என்று மாநிலங்களவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசையும் உப்புமாவையும் ஒப்பிட்டு அவர் பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஒரு கல்லூரி விடுதியில் பெரும்பாலான மாணவர்கள் உப்புமாவை வெறுத்த போதிலும், மீண்டும் அதே உணவை அவர்கள் சாப்பிட நேரிட்டது குறித்து அவர் தமது பேச்சில் விவரித்தார்.
அக்குறிப்பிட்ட கல்லூரி விடுதியில் எப்போதும் உப்புமா மட்டுமே பரிமாறப்பட்டு வந்ததாகவும் இதனால் எரிச்சலான மாணவர்கள், உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சிவா எம்பி குறிப்பிட்டார்.
"இதையடுத்து விடுதிக் காப்பாளர் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 7% பேர் ரொட்டி, முட்டை வேண்டும் என வாக்களித்தனர். 13% பேர் பூரியும் 18% பேர் பரோட்டாவும் 19% பேர் மசாலா தோசையும் கேட்டு வாக்களித்தனர். இட்லிக்கு இருபது விழுக்காட்டினரின் ஆதரவு இருந்தது. 23% பேர் மட்டுமே உப்புமா வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பெரும்பான்மை அடிப்படையில் மீண்டும் உப்புமாவே தேர்வானது.
"அப்படித்தான் உப்புமாவைப் போன்று பாஜக அரசு 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது," என்றார் திருச்சி சிவா.
மாணவர்கள் (எதிர்க்கட்சிகள்) அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

