இடாநகர்: மணமகனை முடிவு செய்த பின்னர், அவரது உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரையும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும் பாரம்பரியம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
இதனால் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை என்றும் பல பெண்கள் மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்தி வருகின்றனர் என்றும் அவ்வூர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
அங்கு டேராடூன் மாவட்டத்துக்கு அருகே உள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் ராஜோ வெர்மா. இவரது மகள் குட்டூ என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டபோது, குட்டூவின் நான்கு சகோதரர்களையும் ஒருசேர திருமணம் செய்து கொண்டார். எனினும் தனது முதல் கணவர் என்றால் அது குட்டூதான் என்கிறார்.
இதேபோல் பல பெண்கள் இரண்டு, மூன்று சகோதரர்களை ஒருசேர திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
எண்பது வயதான புத்தி தேவி என்ற மூதாட்்டி தாம் இரண்டு சகோதரர்களைத் திருமணம் செய்து பிரச்சினைகள் இன்றி குடும்பம் நடத்தியதாகச் சொல்கிறார். இதுபோன்ற திருமண நடைமுறையால் பொருளியல் பிரச்சினைகள் குறையும் என்றும் உறவுகள் வலுப்படும் என்றும் இப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் இளையர்கள் இந்நடைமுறை தங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று கூறுவதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.

