செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6243be85-c5fc-4881-8e37-d54851bd191b
-

ஒட்டுக்கேட்பு: ஒப்புக்கொண்ட அரசு

புதுடெல்லி: சட்டபூர்வ அனுமதி பெற்றே பொதுமக்களின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், மத்திய அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமாக ஒட்டுக்கேட்கப்படுகிறது, உளவு பார்க்கப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

அசாம்: தயாராகும் புது சிறைச்சாலைகள்

கௌஹாத்தி: சிறுமிகளைத் திருமணம் செய்த குற்றத்தின் பேரில் கைதாகி உள்ள அனைவரையும் அடைக்க அசாம் மாநில அரசு தற்காலிக சிறைகளைத் தயார் செய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏறத்தாழ 31 விழுக்காடு பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிகளைத் திருமணம் செய்தவர்களும் அதற்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர். இவர்களை அடைத்து வைக்க பயன்படுத்தப்படாத அரசு வளாகங்கள் உள்ளிட்ட இடங்களை தற்காலிக சிறைகளாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜோஷிமத் புனித நகரில் மேலும் விரிசல்

இடாநகர்: புனித நகரமான ஜோஷிமத்தில் மீண்டும் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. எனினும் புதிதாக சில கட்டடங்க ளில் மட்டுமே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு கூறு வதை ஏற்க இயலாது என பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஒற்றை எண்ணிக்கையிலான கட்டடங்கள் மட்டுமே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவதை ஏற்க இயலாது என்றும் ஏராளமா னோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறின.

ஆந்திர தலைநகர் அமராவதி: மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: மத்திய அரசைப் பொறுத்தவரையில் அமராவதி தான் ஆந்திராவின் தலைநகர் என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இணையமைச்சர் நித்யானந்த ராய், 2014 மாநிலப் பிரிவினை சட்டப்படி அமராவதிதான் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் என்றும் மத்திய அரசு இதற்கு மட்டுமே கட்டுப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.