'ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதால் பிரச்சினை ஏதும் இல்லை'
புதுடெல்லி: தனது கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது நீடித்தாலும் இந்தியாவுக்கு எதிரான பொருளியல் தடை விதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான உறவு என்பது அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது என்றும் இது நீடித்த உறவாகத் தொடரும் என்றும் அந்நாட்டின் துணையமைச்சர் கேரன் டான்பிரெட் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் அனைத்துலக அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இல்லையெனில் இந்தியாவுக்கு எதிராக தடைகள் பிறப்பிக்கப்படும் என்றும் அந்நாடுகள் எச்சரித்தன.
ஆனால் இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் தருவதாக ரஷ்யா அறிவிக்க, அதை ஏற்றுக்கொண்டது இந்தியா.
தற்போது இந்தியாவுக்கு ஆக அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பெறும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து மேற்கத்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது இந்தியா.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுக்கு எதிராக பொருளியல் தடைவிதிக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.
"கொள்கை ரீதியிலான அணுகமுறையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாறுபட்ட நடைமுறைகள் இருக்கலாம்.
"எனினும் அனைத்துலக விதிகளின் அடிப்படையில் இந்த அணுகுமுறையில் ஒழுங்கை நிலைநிறுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
"வட்டார நிலைப்பாடு, இறையாண்மைக்கு இரு தரப்பும் மதிப்பளிக்கின்றன. எனவே ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள எண்ணெய் வர்த்தகம் காரணமாக பொருளியல் தடைவிதிப்பது குறித்து அமெரிக்கா இப்போது ஆலோசிக்கவில்லை," என துணையமைச்சர் கரேன் டான்பிரெட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் பெற்றுக்கொள்வதில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என அமெரிக்க எரிசக்தி துறையின் செயலாளர் பியாட் கூறியுள்ளார்.
தனது எண்ணெய், எரிவாயு வளங்களை ரஷ்யா தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்றும் இனிமேலும் ரஷ்யாவை நம்்பத்தகுந்த எரிவாயு விநியோகிப்பாளராகக் கருத இயலாது என்றும் பியாட் கூறினார்.