புதுடெல்லி: அதானி குழுமம் மீதான முறைகேடு புகார்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முதல் விசாரணை நடத்த உள்ளது. அதானி குழும நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்தக்கோரி மூத்த வழக்கறிஞர் சர்மா உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். தனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என சர்மா வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று முதல் உச்ச நீதிமன்றத்தில் அதானி குழும நிறுவனங்கள் தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்த அதானி குழுமம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை மறுத்து 413 பக்கங்கள் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் எத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கும் என்பது குறித்து விசாரணை தொடங்கிய பிறகே தெரிய வரும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
வழக்கு விசாரணையின் முதல் நடவடிக்கையாக, இவ்விவகாரம் குறித்து உரிய பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்குத்தான் உச்ச நீதிமன்றம் தனது முதல் நோட்டீசை அனுப்பும் என்றும் அதற்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே வழக்கு விசாரணை நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது தீர்மானமாகும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வங்கிகளில் பெற்ற கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
முதற்கட்டமாக ஐநூறு மில்லியன் தொகையை அந்நிறுவனம் வங்கியில் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹால்சிம் என்ற கட்டுமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு மூன்று வங்கிகளிடம் இருந்து அதானி குழுமம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகப் பெற்றிருந்தது என்றும் இந்தக் கடன் தொகையில் ஒரு பகுதியை மார்ச் 9ஆம் தேதிக்குள் அந்நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகளின் மறுநிதியளிப்பு நடவடிக்கை தொடர்பில் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகளைக் களைய முடியும் என அதானி குழுமம்் கருதுவதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக வங்கித் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அதானி குழும செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பங்குச் சந்தையில் அதானி நிறுவனப் பங்குகளுக்குத் தொடர்ந்து நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று பெரும்பாலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.

