திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த திருநங்கை தம்பதியர்க்கு குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவைச் சேர்ந்த 21 வயதான ஜியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஆவார். இதேபோல் 23 வயதான ஜஹாத் என்பவர் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர் ஆவார்.
இவர்கள் இருவருமே சில பிரச்சினைகள் காரணமாக இளம் வயதிலேயே தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் நேரில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், மற்றவர்களைப் போன்று தாங்களும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர்.
இதற்காக மருத்துவரை அணுகியபோது, ஜஹாத் ஆணாக மாறிவிட்டபோதிலும், பிறப்பில் அவர் பெண் என்பதாலும் அவரது கருப்பை அகற்றப்படாததாலும் அவரால் கருத்தரிக்க இயலும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஜஹாத் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில், ஜஹாத்துக்கு அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்துள்ளது என்றும் ஜியா தெரிவித்துள்ளார்.

