புதுடெல்லி: அன்பர் தினத்தை கொண்டாடுவோர் பசு அணைப்பு தினத்தையும் கொண்டாட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் தேதி அன்பர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காதலர்கள் உற்சாக வலம் வருவர்.
இந்நிலையில், அன்பர் தினத்தன்று விலங்குகளிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் கூறுகிறது. இதையடுத்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு, இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து பசு அணைப்பு தினத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
"இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைப்பதற்காக பசு அணைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்.
"யோகா தினத்தைப் போன்று, 'பசு அணைப்பு தினத்தை' அனுசரிக்க வேண்டும், தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும் வகையில், பசு அணைப்பு தினம் அனுசரிக்க வேண்டும்," என விலங்குகள் நல வாரியம் கூறியுள்ளது.

