புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ நேற்று 'எஸ்எஸ்எல்வி டி 2' ரக ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று காலை 9.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரோ குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்துசெல்லும் எஸ்எஸ்எல்வி-டி1 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. எனினும், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோள்களைத் திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் போனது.
இதையடுத்து மீண்டும் முயற்சி மேற்கொண்ட இஸ்ரோ உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட்டை நேற்று ஏவியது.
34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டதாகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், மொத்தம் 334 கிலோ எடை கொண்ட மூன்று செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.
இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் 22.7 கிலோ எடை கொண்ட ஜானஸ் -1 செயற்கை கோள், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆசாதி சாட்- 2 செயற்கைக்கோள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

